மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை துல்லியமாக அறிய, வானிலை நிலவரங்களை உடனுக்குடன் அறிய புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் மீனவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்துக்குள் இஸ்ரோ நிறுவனத்தின் டிரான்ஸ்பாண்டர்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 3,047 டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆழ்கடலில் படகு இருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களையும் துல்லியமாக அறியலாம். ஆபத்து நேர்ந்தால் உதவியும் பெறலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்திட மேம்படுத்தப்பட்ட ‘டிரான்ஸ்பாண்டர்’ என்ற தகவல் தொடர்பினை முழுக்க மீனவர்களுக்காக உருவாக்கியுள்ளது.
நிலப்பரப்பில் இருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். இக்கருவியை படகில் பொருத்தி, புளூடூத் வாயிலாக இணைத்து மொபைலில் உள்ள செயலி வழியாக தகவல்களையும் பெறலாம். இஸ்ரோவில் என்எஸ்ஐஎல் பிரிவு இதற்கான பணிகளைத் தொடங்கி ஒவ்வொரு மாநிலமாக மத்திய அரசு மூலம் தரத் தொடங்கியிருக்கிறது.
இதுபற்றி புதுச்சேரியின் மீன்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, “இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் மீனவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த டிரான்ஸ்பாண்டர் ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
» மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
» கதறும் தோழர்கள்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
இந்த டிரான்ஸ்பாண்டரை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும் போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும். அதேபோன்று, கரையில் உள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ இயலும்.
இதற்காக மொத்தம் 3,047 டிரான்ஸ்பாண்டர்கள் புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவை பெரிய விசைப்படகுகள் 582, இயந்திரம் பொருத்தப்பட்ட மோட்டார் மீன்பிடி படகுகள் 2,465 என பிரித்து பொருத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 200 பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் பொருத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முழு செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.
இந்த டிரான்ஸ்பாண்டரினால் அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகுகளுக்கு அனுப்ப இயலும். மேலும், இக்கருவியின் மூலம் ஆழ்கடலில் படகு நிலை கொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்டறிய இயலும். மாநில அரசின் தரப்பில் நான்கு பிராந்தியங்களிலும் கட்டுப்பாட்டு அறை இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளுக்கு அனைத்து உதவிகளும், வழிகாட்டுதல்களும் தரையில் இருந்தே கிடைக்கும். தற்போது ஒவ்வொரு மாநிலமாக மத்திய அரசு இதனை அளித்து வருகிறது. விரைவில் ஒரு மாதத்துக்குள் இவை புதுச்சேரிக்கு கிடைக்கும்" என்று தெரிவித்தனர்.