கடலூர் பேருந்து நிலைய மாற்றம் அவசியமா? - ஓர் அலசல்

By ந.முருகவேல்

பிரிட்டிஷ் இந்தியாவில் தென்னகத்தின் தலைநகராக விளங்கிய கடலூர், தொன்மையான நகரங்களில் ஒன்று. பல வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கடலூர் நகராட்சி நூற்றாண்டுகளை கடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு, இது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

அதற்கு முன்னரே கடலூர் நகரின் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு, திருப்பாதிரிபுலியூரில் உள்ள கடலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே கரும்பு ஆராய்ச்சி நிலையப் பகுதியில் 18 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2020-ம் ஆண்டு நடைபெற்றது. ஆனாலும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைமையிலான அரசு அமைந்த நிலையில், கேப்பர் மலையில் உள்ள எம்.புதூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

கடலுாரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள கேப்பர்மலை பகுதியில் உள்ள எம்.புதுாருக்கு பேருந்து நிலையத்தை மாற்றினால் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும், இதனால் கடலுாரில் இருந்து வெளியூருக்கு பயணிப்போர் ஊருக்குள் வர கால விரயம் ஆகும்.

ஆட்டோவுக்கு பெரும் தொகை செலவிட வேண்டியது இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் இருமுறை எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில், கடலூருக்கு வருகை தந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இதுபற்றி கூறும்போது, “கடலூரில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுநர் குழு அளிக்கும் பரிந்துரையின்படி கடலூர் புறநகர் பேருந்து நிலையம் அமைக் கப்படும்” என்று தெரிவித்தார்.

கடலூர் பேருந்து நிலையம் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் மருதவாணன் கூறும்போது, “எம்.புதூரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.

பருவ கால மாற்றம் பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. கேப்பர் மலைப் பகுதியில் கிராவல் மண் வெட்டியெடுத்துச் செல்வது ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நிலச்சரிவு ஏற்படும்.

எனவே சமவெளிப் பகுதியில் பேருந்து நிலையம் அமைய வேண்டும். எம்.புதூர் அல்லாமல் கடலூர் தொகுதிக்குட்பட்ட வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேருந்து நிலையம் அமைக்கலாம்” என்று தெரிவிக்கிறார்.

இதுதொடர்பாக கடலூர் மாநகராட்சி ஆணையர் அனுவிடம் கேட்டபோது, “ஆய்வு செய்து வருகிறோம். வல்லுநர் குழு அறிக்கை தரும். அதைக் கொண்டு, ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்” என்றார்.

கடலூர் மேயர் சுந்தரி ராஜாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஒரு நகர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தான் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

கடலூர் நகரில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்க போதிய இடமில்லை. அதனால் மாற்றிடம் அவசியமாகிறது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் கடலூருக்கு மேலும் வளர்ச்சித் தேவைப்படுகிறது.

நகரத்தின் எல்லை விரிவடையும் போது தான் நகரின் உட்புறம் வளர்ச்சி பெறும். போக்குவரத்து நெருக்கடிக்கும் தீர்வு ஏற்படும்.

எம்.புதூரில் 18 ஏக்கர் நிலத்தில் 13 ஏக்கர் போக்குவரத்துப் பயன்பாட்டுக்கும், 5 ஏக்கரில் வணிக கட்டிடங்களும் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், ஏற்கெனவே உள்ள திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்படும். அந்த பேருந்து நிலையம் மூடப்படாது. புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் அளவுக்கு நகருக்குள் 18 ஏக்கர் இடம் கிடைத்தால் பேருந்து நிலையம் அமைக்கலாம்” என்கிறார்.

மக்கள் தொகை அதிகரிப்பால் கடலூர் நகரத்தின் நெருக்கடி, பிரமாண்ட வணிகக் கட்டிடங்களின் வளர்ச்சி. போக்குவரத்து அதிகரிப்பு போன்றவைகளால் பேருந்து நிலையத்தின் மாற்றம் அவசியமாகிறது.

புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், தற்போது இயங்கும் பேருந்து நிலையம் மூடப்படாது எனும் போது, புறநகர் பேருந்து நிலையப் பணிகளை தொடங்குவது இன்றியமையாதது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE