ஒரே திட்டப் பணியை தனித்தனியாக தொடங்கிவைத்த அதிமுக - திமுகவினர்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

By KU BUREAU

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலை உள்ளிட்ட திட்டப் பணியை அதிமுக மற்றும் திமுகவினர் தனித்தனியாகத் தொடங்கி வைத்தனர். இதுதொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கே.பி.முனுசாமி எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி வட்டம் கும்பளம் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ராமன்தொட்டி கேட் முதல் சின்னார்தொட்டி கிராமத்தில் மாநில எல்லை வரை ரூ.5 கோடியே 36 லட்சம் 55 ஆயிரம் மதிப்பில் புதிய சாலை பணி மற்றும் குப்பம் ஏரி கால்வாயில் ரூ.2 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் சிறுபாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, இத்திட்டப் பணிகளை நேற்று காலை 7.30 மணி அளவில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமையில் திமுகவினர் தொடங்கி வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில் அதிமுக துணை பொதுச் செயலாளரும், அத்தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தனது கட்சியினருடன், அதே திட்டப் பணிகளை தொடங்கி வைக்க ராமன்தொட்டி கேட் பகுதிக்கு வந்தார்.

திமுகவினரை கண்டித்து, கிருஷ்ணகிரி அருகே ராமன்தொட்டி கிராமத்தில்
வேப்பனப்பள்ளி-பேரிகை சாலையில் கே.பி.முனுசாமி எம்எல்ஏ
தலைமையில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்

அப்போது, அங்கிருந்த திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாத்தகோட்டா சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் நாகேஷ் தலைமையிலான திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதிமுக-திமுகவினர் இடையே வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து, கே.பி.முனுசாமி எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏ-க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் வேப்பனப்பள்ளி-பேரிகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஏடிஎஸ்பி சங்கர், ஓசூர் ஏஎஸ்பி அக்ஷய் அனில் வாக்கரே ஆகியோர் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 4 மணி நேரத்துக்குப் பின்னர் சுமுக முடிவு ஏற்பட்டது. திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், மறியல் கைவிடப்பட்டு, திட்டப் பணிகளை கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.

ஒரே திட்டப்பணியை திமுக மற்றும் அதிமுகவினர் போட்டி போட்டிக் கொண்டு தொடங்கி வைத்த நிகழ்ச்சி கிராம மக்களிடம் அதிர்ச்சியையும், அதிருப்தியை யும் ஏற்படுத்தியது.

4 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் திட்டப் பணியை தொடங்கி வைத்த
கே.பி.முனுசாமி எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுகவினர்.

இதுதொடர்பாக கே.பி.முனுசாமி கூறும்போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் அரசு நிர்வாகம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது தொகுதியில் திட்டப் பணியை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, வன்முறையில் ஈடுபட முயற்சி செய்தார்கள்” என்றார்.

திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பாத்தகோட்டா சீனிவாசன் கூறும்போது, “இத்திட்டப் பணிக்கு திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இப்பணியை இன்று (நேற்று) காலை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். இப்பணியை அதிமுகவினர் மீண்டும் தொடங்கி வைக்க வந்து தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தினர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE