திருமாவளவன் திமுகவை எதிர்க்கவில்லை: அமைச்சர் முத்துசாமி கருத்து

By KU BUREAU

ஈரோடு: தமிழகத்தில் இந்த ஆட்சியில் மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்படவில்லை. எனவே, கூட்டணியில் இருந்துகொண்டு திருமாவளவன் திமுகவை எதிர்ப்பதாக கருதக்கூடாது, என வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் கூறியதாவது: விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளார். ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேபோல, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாநாடு நடத்துகிறார். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது.

இந்த ஆட்சியில் மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்படவில்லை. எனவே, கூட்டணியில் இருந்துகொண்டு திருமாவளவன் திமுகவை எதிர்ப்பதாக கருதக்கூடாது. அவரது கருத்தை, கோரிக்கைகளை தெரிவிக்கவே திருமாவளவன் மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப் படுத்த உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி மட்டும் தற்போது மனுக்கள் பெற உத்தரவிடப் பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள், கட்டிடங்கள் குறித்து கண்டறிய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத பள்ளி கட்டிடங்களை வரைமுறைப்படுத்த இந்த அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE