உஷார்... இனி 15 நாட்களுக்கு மேல் தெருவோரங்களில் வாகனங்கள் நின்றால் பறிமுதல்! மாநகராட்சி ஆணையர் அதிரடி!

By காமதேனு

சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணியாக மாஸ் கிளீன்ங் திட்டத்தினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் புதுப்பேட்டை கூவம் ஆற்றில் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சென்னை மாநகரம் மிகப் பெரிய மாநகரமாகவும், உலகத்தரம் வாய்ந்த சிறப்புமிக்க இடங்களைக் கொண்டதாக உள்ளது. ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களும் இங்கு உள்ளது.

இந்த பகுதியில் தூய்மைப் பணி மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கையில் இறங்கி பணிகள் மேற்கொள்ளுதல் (Call for Action) என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள கழிவுகளை அகற்றுதல், பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்தல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக குப்பை தேங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களில் இந்த தீவிரத் தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக சாலை மற்றும் தெருவோரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குப்பைக் கொட்டும் வளாகங்களில் வைக்கப்படும்.

இந்த பயன்பாடற்ற கார்களில் மழைநீர் தேங்கும் போது டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. ஆரம்ப நிலையிலேயே கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பயன்பாடற்ற வாகனங்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். பொது மக்களும் இந்தப் பணிகளில் இணைந்து செயல்பட்டு மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE