“வாசிப்பு பழக்கம் நல்ல மனிதனை உருவாக்கும்” - புத்தகத் திருவிழாவில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் பேச்சு

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: “வாசிப்பு பழக்கம் நல்ல மனிதனை உருவாக்கும், புத்தகம் வாசிப்பை ஒரு நல்ல பழக்கமாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்” என மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் இன்று நடந்த புத்தகத் திருவிழாவில்பேசினார்.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: “தொட்டுத் தொட்டுப் பார்த்தால் அது வெறும் காகிதம் தொடர்ந்து பயன்படுத்தினால் அதுவே ஆயுதம் என்று புத்தகத்தை பற்றி பெருமையாக சொல்வார்கள். அத்தகையப் புத்தகத்திருவிழாவுக்கு வந்ததை வரவேற்கிறேன். புத்தகங்களை தேடித் தேடிப் படித்த காலம் இருந்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு கற்பனை வளம் அதிகமுண்டு. ஆனால் அரசு அதிகாரிகளான எங்களுக்கு அது கிடையாது.

அரசாங்கம் சொல்லக்கூடிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். மற்றவர்களின் கற்பனையை ரசனையைத்தூண்டுவது மிகவும் கடினம். எழுத்தாளர்கள், கற்பனை சக்தியுடைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக செயற்பாட்டாள்ரகள் இந்த சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரம். அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காகத்தான் சென்னையில் நடந்த புத்தகத்திருவிழாவை அனைத்து மாவட்டங்களிலிலும் தமிழக அரசு நடத்திவருகிறது.

அதன்படி தமிழகத்திலேயே குளிரூட்டப்பட்ட அரங்கில் புத்தகத் திருவிழா நடப்பது மதுரையில் மட்டும்தான். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மாநாட்டு அரங்கில் முழுவதும் குளிரூட்டப்பட்ட 40 ஆயிரம் சதுரடி அரங்குகளில் நடப்பதில் மிகப்பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். புத்தகம் என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தினமும் வாசிப்பதை தவிர்த்து மாற்றி வேறு புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்பது முக்கியம். நாங்கள் படித்த காலத்தில் புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது என்ற வகையில் புத்தகங்களை தேடி படித்திருக்கிறோம்.

வயிறு முட்டும் அளவுக்கு சாப்பிட்டாலும் கடைசியில் இனிப்பு வைத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம். இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா?. இதுகுறித்து எழுத்தாளர் யுவல்நோ ஆராரி என்ற எழுத்தாளர் ஹோமோசேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் பண்டைய காலத்தில் வாழ்ந்த குகை மனிதன் வேட்டையாடும்போது மாமிசம் கிடைக்கும். அவ்வளவு சீக்கிரம் இனிப்பு கிடைக்காது. அவன் வாழ்ந்த காலத்தில் இனிப்பு என்பது கனிந்த பழம். அக்காலத்தில் கனிந்த பழம் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. ஒரேயடியாக கிடைக்கும், இல்லையேல் ஒட்டுமொத்தமாக கிடைக்காது என்ற நிலையில், அத்தகைய பழங்கள் கிடைக்கும்போது வயிறு நிரம்பியிருந்தாலும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவனிடமிருந்து ஆரம்பித்த செயல், அந்த ஜீனிலிருந்து இன்று வரை தொடர்கிறது என்பதை அருமையாக எழுதியிருப்பார்.

திரைப்படங்கள் பார்க்கும்போது கற்பனைத்திறன் வளராது. புத்தகம் படிக்கும் போதுதான் விசாலமான பார்வையும், கற்பனைத்திறனும் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் மிகப்பெரும் இன்னொரு ஆளுமை எழுத்தாளர் டாக்டர் சந்திரசேகரன். இவர் போலீஸ் சர்ஜன். இவரது சிறப்பு என்னவென்றால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் முதல் குழுவை கண்டுபிடித்தவர். அவரது வழக்கில் தொடர்ந்து பயணித்தவர் அங்கு கிடைத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை வைத்து ‘தி பர்ஸ்ட் ஹியூன் பாம்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் ஹைதராபாத்தில் ஆல்ட் பப்ளிகேஷன்ஸில் ஒரு புத்தகம் இருந்ததை வாங்கிப்படித்தேன்.

புத்தகங்களால் கிடைக்கும் சுவையை, சுகத்தை அனுபவித்துவீட்டால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை கைவிடமாட்டீர்கள். புத்தகத்தை கீழே வைக்கமாட்டீர்கள். அதேபோல், சிவபெருமான் பற்றிய புனைவுக்கதையை படித்தேன். விமான நிலையத்தில் காத்திருந்தபோது படித்தேன். அதில் கிடைத்த அனுபவம், தூங்காமல் அடுத்தடுத்த பாகங்களை படித்தேன். அந்த வகையில் திரைப்படங்கள் தராத அனுபவத்தை புத்தகங்கள் நமக்குத் தரும். திரையில் அவர்கள் காண்பிப்பதை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் புத்தகம் படித்தால் கற்பனை சக்தி அதிகரிக்கும். புத்தக வாசிப்பை நீங்கள் மட்டுமில்லாமல், அடுத்த சந்ததிக்கும் கொண்டு செல்ல வேண்டும். முன்பெல்லாம் ரயில் பயணங்களில் புத்தகங்களை தூக்கிச் சுமக்க வேண்டும்.

தற்போதைய காலமாற்றத்திற்கேற்றவாறு ‘கிண்டில்’ என்ற ஒரு ‘ஆப்’ உள்ளது. அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை படிக்கலாம். எனவே உங்களுக்கு பிடித்ததை படியுங்கள். நல்ல வாசிப்பு என்பது நல்ல மனிதனை உருவாக்கும். நல்ல மனிதன் உருவானால் நல்ல சமூகம் உருவாகும், நல்ல சமூகம் உருவானால் எங்களது வேலை எளிதாகும். புத்தகம் வாசிப்பை ஒரு நல்ல பழக்கமாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார். இதில் எழுத்தாளர், இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார், கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE