ராகுல் கருத்துகளால் சலசலப்பு முதல் ட்ரம்ப் Vs கமலா விவாத ஹைலைட்ஸ் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

“10 ஆண்டுகளில் ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது” - ராகுல்: அமெரிக்காவுக்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் க்ளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் உடைந்து விட்டது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது. அது மிகவும் பலவீனமடைந்துள்ளது. தற்போது அது எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. அது திறம்பட போராடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

இதனிடையே, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுபவரும், இந்தியாவுக்கு எதிரானவருமான இல்ஹான் உமருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி மீது அமித் ஷா சாடல்: “நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்.” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் கருத்துக்கு காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னுன் ஆதரவு: வெர்ஜினியாவில் புலம் பெயர்ந்தஇந்தியர்களுடன் ராகுல் காந்தி உரையாடும்போது, “இந்தியாவில் நடைபெற்றும் வரும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பது பற்றியதே” என்றார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் சீக்கியர்களின் நிலை குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு, அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் சிங் பன்னுன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் சீக்கியர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து ராகுல் காந்தி வெளிப்படையாக பேசியது துணிச்சல் மிக்க உரை மட்டுமல்ல. அது கடந்த 1947 முதல் இந்தியாவில் சீக்கியர்கள் எதிர்கொண்டு வரும் உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: எல்லைகளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்முவின் அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். இந்தத் தாக்குதலுக்கு பிஎஸ்எஃப் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். என்றாலும், பாகிஸ்தான் தரப்பு உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

“பாமக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை” - திருமாவளவன்: “உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் பங்கேற்கலாம். பாமக மற்றும் பாஜகவுக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். “அந்த இரு கட்சிகளும் மதவாத, சாதியவாத கட்சிகள் என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே, விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “எங்களுக்கு யாரும் அழைப்பும் விடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த 45 ஆண்டுகளாக பாமக மது ஒழிப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தெரிவிப்போம்” என்றார்.

நெல்லை: மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாள்: நெல்லை தாழையூத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய சோதனையில் மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சக மாணவர்களுக்குள் இருந்த பிரச்சினை காரணமாக பள்ளிக்கு அரிவாளை எடுத்து வந்த 2 மாணவர்களை தாழையூத்து போலீஸார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 67-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி எஸ்.பி நேரில் விசாரணை: வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி-யான ராஜலட்சுமியின் வீட்டில் ரூ.4.25 லட்சம் பணம் திருடிய புகாரில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் 95 நாட்கள் தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி எஸ்பி-யான வினோத் சாந்தாராம் விசாரணை மேற்கொண்டார்.

நெல்லை பள்ளியில் பாலியல் தொல்லை புகார்: நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முழுமையாக விசாரணை நடத்தி தகவல் தெரிவிக்குமாறு உளவுத் துறையினருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

அனல் பறந்த ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் மிகவும் முக்கியமான டொனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்கப் பொருளாதார நிலவரம் முதல் கருக்கலைப்புச் சட்டம் வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தைத் தொடங்கிய ஜ்னநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், “ட்ரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலை காலத்துக்குப் பின்னர் மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் ட்ரம்ப் ஆட்சியில் தான் நிகழ்ந்தது. ஆனால் நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும்” என்றார்.

“கமலா ஹாரிஸ்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் - ரஷ்யப் போரை அவர் தடுக்கத் தவறிவிட்டார். இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகிவிடும்” என்று ட்ரம்ப் சாடினார். இந்த விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE