உக்கடம் - சுங்கம் வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கியது: ஆத்துப்பாலம் சாலை மேம்பால பணி நிறைவு 

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலை வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து இன்று (செப்.11) முதல் தொடங்கியது.

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பி்ல் ரூ.481 கோடி மதிப்பில் 3.80 கிலோ மீ்ட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏறுதளத்தில் ஏறி, கரும்புக்கடை, ஆத்துப்பாலத்தை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், அதேப் பகுதிகளில் இருந்து மேம்பாலத்தில் ஏறி, உக்கடம் - செல்வபுரம் புறவழிச்சாலையில் இறங்கி ஒப்பணக்கார வீதி, செல்வபுரம் புறவழிச்சாலை உள்ளிட்ட வழித்தடங்களுக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டிருந்தது.

உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை மேம்பாலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேசமயம், இந்த மேம்பாலத்தில் சுங்கம் - உக்கடம் புறவழிச்சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மேல ஏறுதளம் வழியாக ஏறும் பணி, பொள்ளாச்சி - பாலக்காடு சாலைகளில் இருந்து மேம்பாலத்தின் வழியாக ஏறி உக்கடம் - சுங்கம் வழித்தடத்தில் கீழே இறங்கும் தளம் ஆகியவை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் இருந்தது. உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை மேம்பாலம் திறக்கப்பட்டாலும், இவ்வழித்தடம் பணிகள் நடைபெற்றதால் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சுங்கம் - உக்கடம் சாலை ஏறுதளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இப்பணிகள் முடிந்து, இன்று (செப்.11) முதல் முழு பயன்பாட்டுக்கு இவ்வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘180 மீட்டர் தூர நீளத்தில் இந்த ஏறுதளம், இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறுதளம் மற்றும் இறங்குதளம் தலா 5.50 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.10) சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்று (செப்.11) முதல் முழு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் இருந்து மேம்பாலத்தில் ஏறி வரும் வாகன ஓட்டிகள் சுங்கம் நோக்கி இவ்வழித்தடத்தில் செல்லலாம். அதேபோல், சுங்கம் புறவழிச்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், இவ்வழித்தடத்தில் ஏறி பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் இறங்கிச் செல்லலாம்’’ என்றனர்.

ரவுண்டானா அமைக்க ஆய்வு: இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்புப் பிரிவினர் கூறும்போது,‘‘உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை மேம்பாலத்தின் சுங்கம் புறவழிச்சாலையில் இறங்கும், ஏறும் வழித்தடம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளதால், இவ்வழித்தடத்தில் இச்சாலையில் நெரிசலை தவிர்க்க, வி்ன்சென்ட் சாலை பிரிவு வரும் இடத்தில் வாகனங்களில் நெரிசலில் சிக்காமல் செல்ல ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு இன்று நடத்தப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களி்ல் ரவுண்டானா அமைக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE