சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலை கண்காட்சி: ஆளுநர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்

By KU BUREAU

சிட்லபாக்கம்: சிட்லபாக்கத்தில் நடைபெற்று வரும் 21,000 விநாயகர் சிலை கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன். இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை கொண்டு ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரத்தை அடுத்தசிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18-ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி, கடந்த 7-ம் தொடங்கியது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்த இந்த கண்காட்சி செப். 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த கண்காட்சியை நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் வருகை தந்து பார்வையிட்டார். விநாயகர் கண்காட்சியை ஏற்பாடு செய்த சீனிவாசன் ஒவ்வொரு விநாயகரின் சிறப்பம்சங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கினார்.

மிகவும் சிறப்பாக கண்காட்சி இருந்ததாகக் கூறிய ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஆளுநர் வருகையையொட்டி சிட்லபாக்கம் பகுதியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல் மத்திய அமைச்சர் முருகன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கண்காட்சியை பார்வையிட வருகை தர உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE