கொள்ளிடத்தில் மூழ்கி இறந்த 5 பேரின் குடும்பத்துக்கு நிதி: தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு

By KU BUREAU

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த5 இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை எழும்பூர் நேரு பூங்கா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு, கடந்த செப்.8-ம்தேதி முற்பகல் திருச்சி- செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் கிழக்குப் பகுதியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர்.

அப்போது கிஷோர் (20), கலைவேந்தன் (19), ஆண்டோ (21),பிராங்கிளின் (23), மனோகர் (19)ஆகிய 5 பேரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தனர். இந்த துயரகரமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.

அவர்களது பெற்றோர், உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE