ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?

By காமதேனு

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்க உள்ளன.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை மக்களவைத் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. குறிப்பாக தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்களை வழங்கலாம் என இரு கட்சிகளும் அறிவித்து இருந்தன. நேற்றுடன் அதிமுக மற்றும் திமுகவின் விருப்ப மனுக்கள் பெறப்படும் காலம் முடிவடைந்தது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்

இதில் அதிமுக சார்பில் 2,475 பேரும், திமுக சார்பில் 2,984 பேரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். திமுகவை பொருத்தவரை முக்கிய நபர்களாக தற்போதைய எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோரும், கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, சபாநாயகர் அப்பாவின் மகன் அலெக்ஸ் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இதேபோல் அதிமுகவிலும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் விருப்பம் மனுக்களை அளித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து திமுக சார்பில் வருகிற 10-ம் தேதி விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நேர்காணலை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்தந்த மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அதிமுக சார்பில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நேர்காணலை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் நேர்காணலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் ஓரிரு நாட்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள் எவை என்பதும் ஓரிரு நாட்களுக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE