த.வெள்ளையனுக்கு புகழஞ்சலி முதல் அன்பில் மகேஸ் ‘திட்டவட்டம்’ வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. த.வெள்ளையன், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

த.வெள்ளையனுக்கு தலைவர்கள் புகழஞ்சலி: “தமிழகத்தில் பல்வேறு அணிகளாக பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டு வந்து வலிமையான அமைப்பை கட்டமைத்தவர் வெள்ளையன்” என்று ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“வணிகர்களின் உரிமைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி, பல கோரிக்கைகளை வென்றெடுத்தவர்” என்று முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

“அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடும் போராட்டத்தை முன்னெடுத்தவர் த.வெள்ளையன். ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட வியாபாரிகளின் நலன்களுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் எதிராக போராடிய களப் போராளி அவர்,” என்று ஜவாஹிருல்லா இரங்கல் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் த.வெள்ளையன்” என்று பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல் செய்தியில் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

“சிதறிக்கிடந்த வணிகர்களை ஒருங்கிணைத்தவர்” : “வணிகர்கள் அன்றைய கால கட்டத்தில் எதிர்கொண்ட சமூக விரோதிகளின் அச்சுறுத்தல், அரசு அதிகாரிகளின் அத்து மீறல் போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவர, தமிழகத்தில் சிதறிக்கிடந்த வணிகர்களை ஒருங்கிணைத்து, தன் போராட்ட குணத்தினால் வணிகர்களை களத்தில் நின்று வழிநடத்திய தலைவர்களுள் முன்னோடி த.வெள்ளையன். அவர் அமைத்துத் தந்த கட்டமைப்பை காலத்தின் கட்டாயத்தால் கருத்து வேறுபாடு கொண்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், வணிகர்களின் கட்டமைப்புக்கு உழைத்த மாபெரும் தலைவர் அவர் என்பதில் மாற்று கருத்தில்லை” என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மது ஒழிப்பு மாநாடு - அதிமுகவுக்கு விசிக அழைப்பு: “வரும் அக்.2-ல் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் இணைய வேண்டும், அதிமுக கூட இணையலாம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், மனித வளத்தை பாழ்படுத்தும் மதுவை அரசே விற்பது தேசத்துக்கு விரோதமான செயல். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மணிப்பூரில் 3 மாவட்டங்களில் தடை உத்தரவு: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, 3 மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தடுக்கும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும், தவுபால் நகரில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைச் சமாளிக்க முடியாத மாநில காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை நீக்கக் கோரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதை அடுத்து, இம்பால் மாவட்டங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள ஐகோர்ட் சரமாரி கேள்வி: ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கேரள அரசை சாடியுள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

‘திரையுலகில் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன செய்துள்ளீர்கள்? பெண்கள் அதிகம் வசிக்கும் நம்மை போன்ற ஒரு மாநிலத்தில் இப்படியான நிலைமை கவலையளிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நீங்கள் மவுனம் காப்பது ஏன்? என சரமாரியாக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இடஒதுக்கீடு: அமெரிக்காவில் ராகுல் கருத்து: “இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தியிடம், “இந்தியாவில் இடஒதுக்கீடு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?” என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறாக பதிலளித்துள்ளார்.

மேலும் அவர், “நிதி எண்களைப் பார்க்கும்போது, ​​பழங்குடியினருக்கு 100 ரூபாயில் 10 பைசா கிடைக்கும்; தலித்துகள் 100 ரூபாயில் 5 ரூபாய் பெறுகிறார்கள், அதே எண்ணிக்கையில் தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பெறுகிறார்கள். இது, சமத்துவமற்ற நிலைக்கு ஒரு சாட்சி” என்று அவர் விவரித்துள்ளார்.

கொல்கத்தா மருத்துவர்கள் திட்டவட்டம்: மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலனை செய்வோம். இல்லையெனில், முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் விரும்பவில்லை என்றே நாங்கள் புரிந்துகொள்வோம். அப்படியானால், மாநிலம் முழுவதும் ஏற்படும் சூழ்நிலைக்கு நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பாக்குவோம்” என மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு கல்வி நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. தேசிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை உள்ளே கொண்டு வருவதற்கு நினைக்கிறது. கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களிடம் அறிவு சார்ந்த விஷயங்களை கொண்டு செல்லும்போது, பேச்சாளர் மகாவிஷ்ணு போன்றவர்கள் மாணவர்களிடம் மூடநம்பிக்கைகளை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வியில் மதம் கலக்கக் கூடாது. பள்ளி நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இரண்டு நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE