மதுரை: மதுரையில் வறுமையில் வாடிய பெண்ணுக்கு சொந்தமாக தொழில்புரிய பெண் காவல் ஆய்வாளர் மனித நேயத்துடன் உதவினார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சசிகலா. இவர் கடந்த 2ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மனுக் கொடுக்க, தனது கைக்குழந்தையுடன் வந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து தல்லாகுளம் பெண் காவல் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட போலீஸார் அவருக்கு உதவினர்.
அவர்களிடம், "சாப்பாட்டுக்கே வழியில்லை, கணவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். ஏதாவது உதவி கேட்டு மனு கொடுக்க வந்திருப்பதாகவும் பெண் ஆய்வாளரிடம் சசிகலா கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு அங்கிருந்த சில பத்திரிகையாளர்கள் மற்றும் ரெட் கிராஸ் அமைப்பினர் மூலம் 3 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து வாழ்வாதாரத்திற்கு உதவும் விதமாக பெண் காவல் ஆய்வாளர் சங்கீதா, சாலையோரக் கடை ஒன்றை சொந்தமாக வைத்து தொழில் புரியும் விதமாக சில ஆயிரம் செலவில் தேவையான பேன்சி பொருட்களை வழங்கினார். இதற்கு சசிகலா ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தார்.
» தமிழக மீனவர்கள் 10 பேருக்கு செப்.18 வரை 4-வது முறையாக காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
பெண் காவல் ஆய்வாளரின் மனிதநேய செயல், பாராட்டுக் குரியதாக பேசப்பட்டது. ஏற்கெனவே, தீக்காயத்துடன் ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த மூதாட்டிக்கு இந்த பெண் ஆய்வாளர் உதவி செய்து, மனு கொடுக்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.