திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் சுமார் 1, 100 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 2,500 ஆசிரியர்களில், 50 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றதாக டிட்டோஜாக் தரப்பில் கூறப்படுகிறது.

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று, தொடக்கக்கல்வி துறையில் அரசாணை 243-யை ரத்து செய்ய வேண்டும், மாநில பணி மூப்பு அடிப்படையில், பதவி உயர்வு அளித்தல், பணி மாறுதல் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றாலும், மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE