ஏற்கெனவே பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பல! - அன்வர் ராஜா அதிரடி பேட்டி

By இரா.மோகன்

ஒன்றியச் செயலாளர் தொடங்கி அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு வரையிலும் அலங்கரித்தவர் அன்வர் ராஜா. எம்ஜிஆர் மீதும் அவர் தொடங்கிய கட்சியின் மீதும் ஆழமான பிடிப்பு கொண்டவர். அதனாலேயே யூனியன் சேர்மன், எம்எல்ஏ, அமைச்சர், எம்பி, வஃக்பு வாரிய தலைவர் என பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்துன.

அதிமுகவின் மூத்த முன்னோடியான அன்வர் ராஜா மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர். எந்த நிலையிலும் கொண்ட கொள்கையில் தடுமாற்றம் இல்லாதவர். அதனால் தான், கட்சியை விட்டு நீக்கப்பட்ட நிலையில் பல்வேறு வதந்திகள் பரவிய போதும், மாற்று சிந்தனைக்கு இடம்தராமல் அமைதி காத்தார் அன்வர் ராஜா.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவின் அடையாளமாக திகழும் அன்வர் ராஜா மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டாண்டு கால வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் அதிமுகவுக்குள் வந்திருக்கும் அன்வர் ராஜா, இப்போதும் தயக்கமின்றி மனதில் பட்டதை பளிச்சென பேசுகிறார். காமதேனு டிஜிட்டலுக்காக அவரிடம் பேசினோம். அதிலிருந்து...

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறீர்கள்... வரவேற்பு எப்படி இருந்தது?

கட்சித் தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை அன்போடு வரவேற்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுச்செயலாளர் என்னை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும், மாற்று இடம் தேடி செல்லாமல் கட்சியின் அழைப்பிற்காக காத்திருந்ததின் பலன் தான் இந்த வரவேற்பு.


அதிமுகவுக்கும் பாஜக தலைவர்க அண்ணாமலைக்கும் இடையில் முட்டல் மோதல் தொடரும் நிலையில் இரண்டு கட்சிக்குமான கூட்டணி உறவு இப்போது எப்படி இருக்கிறது?

அதிமுக – பாஜக கூட்டணி தான் என்பது இப்போதைக்கு மேக்ஸிமம் உறுதியாயிடுச்சு. இரு கட்சி தலைவர்கள் இடையே யும் நெருக்கம் உள்ளது. ஆனால், ஏற்கெனவே அதிமுக தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பல. விரும்பும் கூட்டணியாகவும் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த கூட்டணியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை தேர்தல் நேரத்தின் போதுதான் பிராக்டிக்கலாக பார்க்க முடியும்.

வரக்கூடிய தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என்பதால் இங்கு வேட்பாளர் என்பது முன்னிலைபடுத்தப்படாது. ஆனாலும் சொந்தக் கட்சி வேட்பாளர், கூட்டணிக் கட்சி வேட்பாளர் என்ற அடிப்படையிலேயே அதிமுக தொண்டர்களின் ஈடுபாடு இருக்கும்.

அண்ணாமலை

அதிமுக கூட்டணியில் இருப்பதால் பாஜகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் விழுமா?

அதிமுகவை பொறுத்தமட்டில் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. கிரிக்கெட்டின் மதமாக சச்சின் டெண்டுல்கர் எப்படிப் பார்க்கப்படுகிறாரோ அதே போன்றுதான் அதிமுக தொண்டர்களுக்கு ஜாதி மதமாக இருப்பது அதிமுக என்ற கட்சி மட்டும்தான். எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி எம்ஜிஆர் மட்டும்தான். அப்படி இருக்கையில் இது அர்த்தமில்லாத கேள்வியாகவே தெரிகிறது.

சிறுபான்மையினரில் நேரடியாக பாதிப்புக்குள்ளான சிலர் வேறு வழியின்றி தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் சிறுப்பான்மையினரின் வாக்கு வங்கி பாஜக பக்கம் முழுமையாக செல்லுமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும்.


அதிமுக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான கருத்து மோதல்கள் குறித்து..?

மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழக பிரதிநிதியாக இருப்பவர் அண்ணாமலை. அந்த அடிப்படையிலேயே அவரது பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எங்கள் தலைவர்களுக்கு உள்ளது. மற்றபடி எதற்காகவும் அவருக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. அண்ணாமலைக்கு முன்பு தமிழக பாஜக தலைவர்களாக இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் என பலரும் இருந்துள்ளனர். அவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் கேடராக பணியாற்றி, நீண்ட காலம் கொள்கை பிடிப்புடன் இருந்ததன் மூலம் பதவிக்கு வந்தவர்கள்.

அண்ணாமலை அந்தப் பட்டியலில் இல்லாதவர். அவர்களுக்கும் அண்ணாமலைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதனால் தனக்குத் தானே டம் டம் என டமாரம் அடித்துக் கொண்டு இருக்கிறார். மக்களுடன் நேரடித் தொடர்பு வைத்து கொண்டிருப்பவர்களே பிரபலமாக முடியும். அண்ணாமலையோ மீடியாவை வைத்து மக்களிடம் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக்கொண்டிருக்கிறார் அவ்வளவுதான்.

அண்ணாமலை பாதயாத்திரை

அண்ணாமலையின் பாதயாத்திரை தமிழக பாஜகவுக்கு பலன் தரும் என்று நினைக்கிறீர்களா?


பாதயாத்திரை என்றால் எங்கும் நிற்காமல் செல்ல வேண்டும். நின்றுவிட்டால் பாதயாத்திரையின் உயிரும் நின்று விடும். மகாத்மா காந்தி தண்டி யாத்திரை செல்லும் போது 50 பேர்தான் உடனிருந்தனர். பல்வேறு கிராமங்களில் தங்கி மக்களின் நிறை குறைகளை அறிந்து சென்றார். அவரது யாத்திரை நிறைவு பெற்ற போது சுமார் 50 ஆயிரம் மக்கள் அவருடன் சேர்ந்து நடந்தனர்.

மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு காலில் கொப்பளம் வந்த போதும் இடைவிடாமல் நடந்தார் கருணாநிதி. தமிழகம் முழுமைக்கும் பாதயாத்திரை சென்றார் வைகோ. இதே போல குமரி அனந்தனும் பாதயாத்திரை சென்றார். இவர்களைப் போலெல்லாம் அண்ணாமலை பாதயாத்திரை செல்லவில்லை. பாதி தூரம் நடை, மீதி தூரம் வேன் என அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல. அது ஒரு சுற்றுப்பயணம்.


பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடக்கூடும் என வரும் செய்திகள் குறித்து..?

இது பத்திரிகைகளால் பரப்பப்படும் செய்தி என்றுதான் நான் கருதுகிறேன். இலகுவாக வெல்லக்கூடிய வாரணாசி தொகுதியில்தான் அவர் போட்டியிடக் கூடும். ஏனெனில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாடு முழுவதும் செல்ல வேண்டியவர் பிரதமர் மோடி. அப்படி இருக்கையில் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிடுவார் என்பது நிச்சயமல்ல.

வடக்கே வாரணாசியிலும், தெற்கே ராமநாதபுரத்திலும் பிரதமர் போட்டியிட்டால் இடையில் உள்ள எல்லா தொகுதிகளையும் அள்ளிவிடலாம் என யாரோ அவரிடம் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். இதையெல்லாம் தாண்டி பிரதமர் மோடி இங்கு போட்டியிட்டால் எதிர் தரப்பான திமுகவினர் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எங்களுக்கும் கடுமையான வேலை இருக்கும். மக்களும் பிரதமர் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என கருதி மோடிக்கு ஓட்டுப் போடும் வாய்ப்பும் உள்ளது.

பாஜக கூட்டணி பலன் தராது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நீங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமா?

எனக்கும் பாஜகவுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. கட்சி பாஜகவை ஆதரித்த போது நானும் ஆதரித்தேன். கட்சி பாஜாகவை எதிர்த்த போது நானும் எதிர்த்தேன். இனியும் அப்படித்தான் இருபேன். அதிமுக தலமையின் முடிவே எனது முடிவும். இதில் எந்த மாற்றமும் இல்லை.


அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

100 வீடுகள் உள்ள கிராமங்களில் கூட கிளைக் கழகங்களை வைத்துள்ள கட்சி அதிமுக. திமுக உள்ளிட்ட வேறு எந்த கட்சியிடமும் இது போன்ற கட்டமைப்பு இல்லை. இதுவே எங்கள் பலம். இதனால் எந்தக் காலத்திலும், யார் நினைத்தாலும் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்த முடியாது. அம்மா சொன்னது போல், அதிமுக இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE