சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக பருப்பு மற்றும் ஆயில்தட்டுப்பாடு அவ்வப்போது இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
தமிழக அரசு இந்த குறைபாடுகளைக் களைந்து, ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பொருட்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்யாமல், காலத்தே கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களின் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.