கோவை: மும்மொழிக்கொள்கை மிகவும் அவசியம் என தமிழகம், கேரளா சமஸ்கிருத பாரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்த கல்யாண கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களாக சில அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் மும்மொழி கல்வி திட்டம் குறித்தும், சமஸ்கிருத மொழி கற்பிப்பதை எதிர்த்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்கள் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. அரசியல் லாபத்துக்காக மக்களிடம் மொழி விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்.
கடந்த 22 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழி பரப்புவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். மக்கள் மத்தியில் சமஸ்கிருதம் கற்க ஆர்வம் அதிகம் காணப்படுகிறது.
தன்னார்வலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கேட்கும் அனைவருக்கும் எங்களால் கற்பிக்க முடியவில்லை. அஞ்சல் வழியில் பலர் பயில்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் 10 நாட்களில் இலவச சமஸ்கிருத வகுப்புகளில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
» தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள்: ராஜஸ்தானில் ரயிலை கவிழ்க்க சதி
» ஓடிடியில் வெளியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’: எப்போது தெரியுமா?
மும்மொழிக் கொள்கை மிகவும் அவசியம். தமிழ் முக்கியம். மாற்றுக்கருத்து இல்லை. மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர். அவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது. இன்னொரு மொழி படிக்க அரசு அனுமதி வழங்கினால் தமிழை அவர்கள் பயில வாய்ப்பு கிடைக்கும்.
பாரத கலாசாரத்தின் அடிப்படையான வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. சமஸ்கிருதம் எல்லா மொழியிலும் உள்ளது.
திருப்புகழ், திருமந்திரம் அனைத்திலும் சமஸ்கிருதம் கலந்திருக்கும். சமஸ்கிருத வார்த்தைகளை தமிழில் சேர்த்தால் தமிழில் இலக்கண தோஷம் வராது என்பதை அந்த காலத்திலேயே கூறியுள்ளனர். அதை கற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மும்மொழிக் கொள்கையினால் தமிழ் செழிப்பாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.