கடலூர் | ஜீப் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

By க. ரமேஷ்

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி மேம்பாலம் பகுதியில் நள்ளிரவில் ஜீப் மீது டாரஸ் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட புதிய மேம்பாலத்தில் நேற்று (செப்.9) நள்ளிரவில் சென்ற பொலிரோ ஜீப்பும், சாலைப் பணிகளுக்கு மண் ஏற்றி செல்லும் டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இதில் பொலிரோ ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்த நெய்வேலியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன்(57), நெய்வேலி டவுன்ஷிப்பைச் சேர்ந்த விக்னேஷ் (34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று அவர்களை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் அமர்ந்து வந்த விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய விரிவாக்க சாலையில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாததால், சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிரோ ஜீப் நெல் குவியல் மீது எதிர்பாராமல் ஏறியதால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டாரஸ் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து சேத்தியாதோப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணியில் போக்குவரத்து தொடங்காத நிலையிலும் வாகனங்கள் செல்வது, இது போன்ற விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது எனவும், அரசு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு வராத சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE