சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் வரும் செப்.27-க்கு தள்ளிவைத்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரியும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அவரது சாட்சியத்தை வீட்டுக்குச் சென்று பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகைபாலனை நியமித்திருந்தது. அதன்படி வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன் இந்த வழக்கில் பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரது சாட்சியத்தைப் பதிவு செய்து அதைஅறிக்கையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், விசாரணையை வரும் செப்.27-க்கு தள்ளிவைத்துள்ளார்.
» ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பராமரிப்பு குறித்து பழனிசாமி புகாருக்கு அமைச்சர் கயல்விழி பதில்