ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பராமரிப்பு குறித்து பழனிசாமி புகாருக்கு அமைச்சர் கயல்விழி பதில்

By KU BUREAU

சென்னை: ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், விடுதிகளில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக பேணப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதிகளில் பழுது, பராமரிப்பு பணிகளுக்காக கடந்த காலங்களில் ஆண்டுதோறும் ரூ.6 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 2021-2022-ம் ஆண்டு திருத்திய வரவு செலவு திட்டத்தில் சிறப்பு பராமரிப்பு பணிக்காக கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 366 விடுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் அனைத்து விடுதிகளுக்கும் சிறப்பு பராமரிப்பு பணிகள் ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, 520 விடுதிகளில் தாட்கோமூலம் பணி தொடங்க உள்ளது.

மாதாந்திர உணவு கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 -லிருந்து ரூ.1400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,100-லிருந்துரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பல்வகை செலவின தொகை பள்ளிமாணவர்களுக்கு ரூ.50-லிருந்து,ரூ.100-ஆகவும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.75 லிருந்து ரூ.150-ஆகவும் 2 மடங்காக உயர்த்தப்பட்டு மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் அறிக்கை, அடிப்படை ஆதாரம் இல்லாதது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE