சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மே 24-க்கு (இன்று) தள்ளிவைத்தனர்.
பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4-ம் தேதி யூடியூபரான சவுக்கு சங்கரை, கோவை போலீஸார் தேனியில் கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து,சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
» தமிழகத்தில் கனமழை காரணமாக 4,385 ஹெக்டேரில் நீரில் மூழ்கிய பயிர்கள்: பேரிடர் மேலாண்மை துறை தகவல்
அதில், 'போலீஸார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எனது மகன் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாக பதிவு செய்து ஒவ்வொரு நீதிமன்றமாக ஆஜர்படுத்தி வருகின்றனர். காவல்துறையால் தாக்கப்பட்டதால் கை மற்றும் பல்வேறு இடங்களில் காயம்பட்டுள்ள எனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. போலீஸாரால் தனது உயிருக்கு ஆபத்துஇருப்பதாகவும் எனது மகன் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். எனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது' எனக் கோரியிருந்தார்.
இந்த ஆட்கொணர்வு மனுவை நேற்று காலை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கைமீண்டும் நாளை (இன்று) விசாரிப்பதாகவும், அப்போதே இறுதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
இதேபோல, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையையும் நாளைக்கு (இன்று) தள்ளிவைத்துள்ளனர்.
அப்போது, சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல்செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக முதல்வரை ஒருமையில் அழைத்திருப்பதையும் ஏற்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் நாளைய தினமே இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதால், சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், விடுமுறை கால நீதிமன்றத்தில் இந்த வழக்கை மட்டும் இவ்வளவு அவசரம், அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசரம் என்ன என்றும், நாளைக்கே இந்த வழக்கில் இறுதி விசாரணை மேற்கொள்ள அப்படி என்ன சிறப்பு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். அதையேற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு நாளைக்கு (மே 24)விசாரிக்கப்படும், எனக்கூறி, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.