பரந்தூர் அப்டேட் முதல் மணிப்பூர் கலவரம் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

பரந்தூர் விமான நிலைய அப்டேட்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும், பாதிக்கப்படும் குடும்பங்களை இடம் மாற்றுவது தொடர்பான சமூக தாக்க ஆய்வு மற்றும் துயர் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், தேவைப்படும் தண்ணீர், மின்சாரம் விநியோகத்துக்கான வளம், அதற்கான ஒப்புதல், தேவையான பணியாளர்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள், தங்களின் குடியிருப்புகள், விளைநிலம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதை காரணம் காட்டி தொடர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 2 விசைப் படகுகளையும், 22 மீனவர்களையும், அங்குள்ள நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேருந்து நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

‘சிரஸ்தா’ திட்டத்தை விளம்பரப்படுத்த ஐகோர்ட் உத்தரவு:

மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் ‘சிரஸ்தா’எனும் இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான குடியிருப்புக் கல்விக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தரமான உண்டு, உறைவிட கல்வியை வழங்கும் நோக்கில் ‘சிரஸ்தா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 9 வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில், மத்திய அரசின் குடியிருப்பு கல்வி திட்டத்துக்கான ‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு குறித்து பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதல்வரின் வெளிநாட்டு பயணம்: ஜெயக்குமார் விமர்சனம்: வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், முதல்வர் ஆகியுள்ள மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று அமெரிக்கா போய் சைக்கிள் ஓட்டியும், டைட்டானிக் கப்பல் பட ஹீரோ போல் இரு கைகளையும் நீட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியும், சுய விளம்பரம் தேடுகிறார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அனைத்து உண்மைகளும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பேரவைத் தலைவர் அப்பாவு செப்.13-ல் ஆஜராக உத்தரவு: அதிமுக எம்எல்ஏ-க்கள் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வரும் செப்.13-ம் தேதி அன்று நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்.17-ல் மிலாடி நபி பொது விடுமுறை: தமிழகத்தில் மிலாடி நபி வரும் செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் நம்பிக்கை: “எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக ஒன்றிணையக் கூடாது என விரும்பாதவர்கள் தானாகவே அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒற்றுமையாகும். 2026-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்,” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, டல்லாஸ் நகரில் இந்தியர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் முடிவு வந்த சில நிமிடங்களிலேயே, இந்தியாவில் பாஜகவைக் கண்டும், இந்தியப் பிரதமரைக் கண்டும் யாரும் பயப்படவில்லை. எனவே. இவை மிகப் பெரிய சாதனைகள். இந்த சாதனைக்கு ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ காரணம் அல்ல. ஜனநாயகத்தை உணர்ந்த, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை ஏற்கப் போவதில்லை என்பதை உணர்ந்த இந்திய மக்களின் மகத்தான சாதனைகள் இவை” என்று கூறினார்.

மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு: கொல்கத்தாவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், மருத்துவர்கள் தொடர்ந்து பணி செய்யாமல் இருந்தால் பாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மணிப்பூர் கலவரம்: மோடி மீது கார்கே சாடல்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினரிடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் அமைதி திரும்பியிருந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று குக்கி மற்றும் மைத்தேயி பிரிவினரிடையே மீண்டும் வன்முறை வெடித்தது. இதில், 6 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார். மேலும், “மணிப்பூரில் பிரதமர் மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது” என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE