உதயநிதி வருகைக்காக கம்பங்களை இறக்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தியதாக புகார் @ சிவகங்கை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: சிவகங்கையில் விளையாட்டு போட்டிக்கு பயிற்சி எடுக்க விடாமல் உதயநிதி வருகைக்காக விளையாட்டு கொடி கம்பங்களை இறக்கும் பணிகளில் மாணவர்களை அதிகாரிகள் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் அவர் காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.இதையொட்டி விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் விளையாட்டு அரங்கில் உள்ள விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

அவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி எடுப்பதற்காக விடுப்பு எடுத்தனர். ஆனால் அவர்களை பயிற்சி எடுக்க விடாமல், உதயநிதி வருகையையொட்டி வாகனங்களில் வந்த விளையாட்டு கொடி கம்பங்களை இறக்கி வைத்தனர். பள்ளி மாணவர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்த கூடாது என்ற அரசு உத்தரவை மீறி அவர்களை கம்பி தூக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.

இது குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் தான் ஈடுபட்டு வந்தனர். அங்கிருந்தோர் கம்பங்களை எடுத்து வைக்க சொல்லியுள்ளனர். மாணவர்கள் கம்பங்களை தூக்கிய தகவல் தெரிந்ததும், அவர்களை ஈடுபடுத்த கூடாது என கூறிவிட்டோம்" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE