400 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர்... ராஜஸ்தான் மக்களுக்கு காங்கிரஸ் வாக்குறுதி!

By காமதேனு

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஆளும் காங்கிரஸ் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், பெண்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான தாராள வாக்குறுதிகளை வாரி வழங்கி இருக்கிறது காங்கிரஸ்.

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட போது...

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைக்கு நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில், பெண்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு நலத்திட்ட உதவிகள், சாதிவாரி கணெக்கெடுப்பு நடத்தப்படும் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சமாக இடம்பெற்றுள்ளன.

மேலும், பஞ்சாயத்து அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.400க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். எனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சட்டங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்து தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார்.

தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE