திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: தாயனூர் மக்கள் மண்வெட்டி ஏந்தி சாலை மறியல்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து தாயனூர் ஊராட்சி மக்கள் மண்வெட்டி ஏந்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் இருந்து 100 வார்டுகளாக உயர்த்துவதற்காக அருகில் உள்ள சில ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சில கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி தாயனூர் ஊராட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்வெட்டியை தோளில் சுமந்தபடி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாநகராட்சியுடன் தாயனூர் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதி கேட்டனர். போலீஸார் சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்க இயலும் எனக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தாயனூர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஏற்கனவே எடுத்து வந்த மண் வெட்டியை தூக்கிப் பிடித்து வேண்டாம். வேண்டாம். மாநகராட்சி வேண்டாம் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

குறைதீர் கூட்டத்தில் அவர்கள் அளித்த மனுவில் கூறியது: "தங்கள் ஊரில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தாயனூர் கிராமம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தது. 75 சதவீத நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளது. காவிரி ஆற்று பிரிவான பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் 2-ஏ-ன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதாக செய்தி வெளியானது அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.மாநகராட்சியுடன் இணைத்தால் உரிமைகளும், சலுகைகளும் பறிபோகும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பறிபோகும். மாநகராட்சியுடன் இணைப்பதால் பொதுமக்களுக்கு அதிக நிதி சுமை ஏற்படும். ஆகவே தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய காவிரி பாலம் நில ஆர்ஜிதம் செய்யபட்பட உள்ளதால் தங்கள் வீடுகளுக்கான இழப்பீடுத் தொகையை தங்களுக்கு வழங்கக்கோரி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கீழசிந்தாமணி பழைய சட்டக்கல்லூரியில் வசிக்கும் பொதுமக்கள். படம்: தீ.பிரசன்ன வெங்கடேஷ்.

திருச்சி கீழ சிந்தாமணி, பழைய சட்டக் கல்லூரி சாலையைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில், "இப்பகுதியில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். தாங்கள் குடியிருக்கும் இடம் தருமை ஆதினம் மடத்துக்கு சொந்தமானது. ஆனால் தாங்கள் வசிக்கும் வீடுகள் அனைத்தும் தங்களது பொருட்ச் செலவில் கட்டப்பட்டவை.

காவிரி பாலம் கட்டுமானப் பணிக்காக இந்த இடத்தை அரசு கையகப்படுத்தியதாக அறிகிறோம். எனவே நிலத்துக்கான இழப்பீடுத் தொகை ஆதின மடத்துக்கு செல்லும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதேவேளை கட்டிடத்துக்கான இழப்பீட்டுத் தொகையை எங்களுக்கு வழங்கி, எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி செயலாளர் ரபிக் அகமது, மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் அளித்த மனுவில், "உய்யகொண்டான் ஆற்று கரையோரம் உள்ள பகுதியில், 40 வருடங்களாக ஆதிநகர், சாந்தா ஷீலா நகர் பகுதியில் கட்டுமான தொழிலாளர், வீட்டு வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இதில் அவர்கள் சம்பாதிக்கும் பணம் வங்கியில் வாங்கிய கடன் தவணை வட்டியை அடைப்பதற்கே போய் விடுவதால் அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் நாற்பது அடி ரோடு வருவதாகவும், இதற்காக ரோட்டை அளவீடு செய்து வருவதாக அவர்கள் கூறினார்கள். ஆகவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அவர்களது வீடுகளை பாதுகாத்து தர வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE