நாகர்கோவில்: மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், மீன்வளத்தையும் அழிக்கும் காச்சா மூச்சா வலையை நிரந்தரமாக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வலைகளை கையில் ஏந்தி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே மூன்று அடுக்கு செவிள் வலை எனப்படும் காச்சா மூச்சா வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களின் இரு தரப்பினர் இடையே ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பிரச்சனை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளத்தையும் அழிக்கும் காச்சா மூச்சா வலையை நிரந்தரமாக மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேங்காப்பட்டிணம் துறைமுக இனயம் மண்டலம் மீனவ மக்கள் சார்பில் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் சதீஷ்ராஜன் தலைமை தாங்கினார்.
இனயம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வம் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற மீனவர்கள் ஏராளமானோர் கையில் காச்சா மூச்சா வலையை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
» வழக்கறிஞரை தாக்கியவரை கைது செய்யக் கோரிக்கை: மதுரையில் காவல் நிலையம் முற்றுகை
» தமிழகத்தில் கல்வித் தரம்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதில்