2024 தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம்... நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

2024-ல் நடக்கும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி இன்று பேசுகையில்," மூன்று நாட்களாக அனைவரின் கருத்துக்களை நான் கேட்டேன். நாட்டு மக்கள் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்.

இந்த தீர்மானம் வரும் என 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தேன். தற்போது, இது உண்மையாகி உள்ளது. இந்த தீர்மானம் அரசின் பலத்தை சோதிப்பதற்காக நடக்கவில்லை என்பது தெரியும். எதிர்கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. 2024 தேர்தலில் இப்போதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடிப்போம்.

எதிர்க்கட்சிகளின் அரசியல், அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி மசோதாக்களை கொண்டு வந்தோம். ஆனால், அந்த மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தன. இதற்கு எதிர்ப்பது ஏன்? எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டன.

காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். 400 இடங்களைப் பெற்றிருந்த கட்சி 40 இடங்கள் கொண்ட கட்சியாக சுருங்கிவிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியை புதைத்து விட்டார்கள். ராகுல் காந்தி மக்களைப் பற்றி நினைப்பதைவிட என்னைப் பற்றியே 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். பாரத மாதா குறித்து ராகுல் காந்தி பேசியதை மன்னிக்கவே முடியாது. இந்தியா மூன்று துண்டுகளாகப் பிரிய காரணமாக இருந்தவர்கள் பாரத மாதாவை கொலை செய்துவிட்டதாக பேசுவது வேடிக்கை. காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் மூடுவிழா நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் பாரதமாதா சிலை வைப்பதை தடுத்திருக்கிறார்கள். பாரத மாதா பூஜை தடுக்கப்பட்டிருக்கிறது. திமுகவினர் இந்தியா என்பது வட மாநிலத்தில் உள்ள ஒரு ஊர் என்று கூறுகின்றனர். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்திரா காந்தி ஆட்சியில்தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்திராவின் பெயரால்தான் கச்சத் தீவு கொடுக்கப்பட்டது. நமக்கு சொந்தமான இடத்தை இன்னொரு நாட்டுக்கு கொடுத்தது யார்?

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எதிர்கட்சியினர் நோ பால்களையே வீசினர். ஒரு முறை வீசினால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் திரும்ப திரும்ப நோ பால்களையே வீசினர். எதிர்கட்சிகள் பீல்டிங் செய்கின்றனர். ஆளுங்கட்சியினர் சிக்சர் அடிக்கின்றனர். தீர்மானத்தின் மீது முறையான கேள்விகளைக் கேட்க முடியவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் முதல் நபராக பேசாதது ஏன்? ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை காங்கிரஸ் அவமதித்து வருகிறது.

மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கு உயர் நீதிமன்றத்தின் ஒரு உத்தரவுதான் காரணம். வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு இதுவரை 50 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன்.

காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. அந்த மாநிலங்களின் இன்றைய நிலைமைகளுக்கு நேரு அரசு எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். மணிப்பூர் நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். அங்கு அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பேசினார்.

பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பிரதமர் பதிலுக்குப் பின் நடந்த ஓட்டெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்து அரசு வெற்றிபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE