வழக்கறிஞரை தாக்கியவரை கைது செய்யக் கோரிக்கை: மதுரையில் காவல் நிலையம் முற்றுகை 

By என்.சன்னாசி

மதுரை: வழக்கறிஞரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் காவல் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மதுரை ஆட்சியர் வளாகத்திலுள்ள சமூக நலத்துறையில் கவுன்சிலிங் நேற்று முன்தினம் நடந்தது. இதில் திருப்பதி மற்றும் அவரது மனைவி தரப்பினர் பங்கேற்றனர். கவுன்சிலிங்கின்போது, பெண் தரப்பில் வழக்கறிஞர் குமரன் என்பவரும் பங்கேற்றிருந்தார்.

அப்போது, திருப்பதிக்கும், குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. இதில் காயமடைந்த குமரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதிர் தாக்குதலில் திருப்பதிக்கும் காயமடைந்து அவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் குமரன் கொடுத்த புகாரில் அண்ணாநகர் போலீஸார், திருப்பதி மீது வழக்கு செய்தனர். திருப்பதி பதிலுக்கு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கறிஞர் குமரனை தாக்கிய திருப்பதி உள்ளிட்டோரை உடனே கைது செய்ய வலியுறுத்தி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று அண்ணாநகர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு, திருப்பதியை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும், சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த மாநகர துணை ஆணையர் மதுக்குமாரி, அண்ணாநகர் உதவி ஆணையர் சிவசக்தி உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திருப்பதி சிகிச்சை இருப்பதால் உடனே கைது செய்ய முடியவில்லை. இருப்பினும், அவரை விரைந்து கைது செய்யவோம் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE