திமுக பெண் கவுன்சிலர் தர்ணா: சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பெண் கவுன்சிலர் தனது கணவருடன் மாநகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி மாநகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா தேவி. இவரது வார்டுக்குட்பட்ட சிறுவர் பூங்கா தெருவில் போர்வெல் உடன் கூடிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த போர்வெல்லுக்கு புதிய மின் மோட்டார் மாற்றி சில மாதங்களே ஆன நிலையில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த மின் மோட்டார் பழுதடைந்ததாக கூறி, கடந்த 6 மாதங்களுக்கு முன் எலக்ட்ரீசியன் கண்ணன் கழற்றி சென்றார். ஆனால் இதுவரை மோட்டாரை மாட்டவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர்.

இப்போது மீண்டும் மின் மோட்டார் முற்றிலும் பழுதடைந்து விட்டது, புதிய மின் மோட்டார் தான் பொறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் திருத்தங்கல் பகுதி முழுவதும் உள்ள பல்வேறு மின் மோட்டார்களை பழுது அடைந்ததாக கூறி கழற்றி சென்று, எலக்ட்ரீசியன் கண்ணன் விற்பனை செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டார் கவுன்சிலர் இந்திரா தேவி.

மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுத்தும் எலக்ட்ரீசியன் கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி அலுவலகம் முன் பிற்பகல் 1 மணி முதல் கவுன்சிலர் இந்திரா தேவி, தனது கணவர் மாரீஸ்வரன் உடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி, எலக்ட்ரீசியன் கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை எடுத்து கவுன்சிலர் இந்திரா தேவி போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டு சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE