தேனி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர் தேர்வில் விதிமீறல் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தில் தற்காலிக பணியாளர் தேர்வில் விதிமீறல் நடைபெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மோடி கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்:
"தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தனியார் நிறுவனம் மூலம் அவுட் சோர்சிங் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு எதிரான வழக்கில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொது அறிவிப்பு மூலம் தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் 11 மாதங்களில் பணி நீக்கம் செய்யப்படுவர். பின்னர் புதிய அறிவிப்பு வெளியிட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016ல் தற்காலிக ஊழியராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர் தற்போது வரை பணிபுரிந்து வருகிறார்.

அந்த நபரின் மனைவி அதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். எனவே தற்காலிக பணியாளர் தேர்வு தொடர்பாக 2021ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாத தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க தேசிய சுகாதார இயக்ககத்தின் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியாகௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE