புதுச்சேரி: ஊழியர் கடன் விவகாரத்தில் சம்பளத்தை பிடித்த செய்ய உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் புதுச்சேரி அரசு அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நடந்தது.
புதுச்சேரி திருபுவனை அரியூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் அரியூர் அங்கன்வாடி மையத்தில் பல் நோக்கு ஊழியராக பணியாற்றி வந்தார். 2012ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் ரூ.8.50 லட்சம் கடன் பெற்றார். இதற்கான மாத தவணை தொகையை சில மாதம் மட்டும் செலுத்தினார். இதன் பின்னர் கடன் தொகையைக் கட்டவில்லை. இந்த பணத்தை வசூலிக்க தனியார் நிறுவனம் பல்வேறு முயற்சி எடுத்தும் பயனில்லை. இதையடுத்து தனியார் நிறுவனம் புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு கழகத்துக்கு விஜயலட்சுமியின் சம்பளம், எத்தனை ஆண்டுகள் பணி புரிகிறார் என்ற விளக்கம் கேட்டது. இதை அவர்கள் வழங்கவில்லை. இதன்பின் அவரின் சம்பளத்தில் பணத்தை பிடித்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கும் மகளிர் மற்றும் மேம்பாட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
» இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: நாதமுனி - கொளத்தூர் வரையிலான வழித்தடத்தில் பணிகள் தீவிரம்
இதையடுத்து தனியார் நிறுவனம் 2017ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது. வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே விஜயலட்சுமி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து கடன் தொகை ரூ.8.5 லட்சத்துக்கு வட்டி, அபராதம் ஆகியவற்றுடன் ரூ.13.5 லட்சத்தை மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் அசையும் சொத்துக்களில் இருந்து ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற அமீனா அம்பி, நடேசன் நகரில் உள்ள மகளிர் மற்றும் மேம்பாட்டுக் கழக அலுவலகம் வந்தார். அங்கிருந்த மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர் பொருட்களை ஜப்தி செய்தார். அங்கிருந்த அதிகாரிகள், மேல்முறையீடு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.