நான்கு வருடமாக இதுதான் நிலவரம்... ஆளுநர் பிரமாணப் பத்திரத்தின் முழு விவரம்!

By காமதேனு

இந்த 4 ஆண்டுகளில் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும், 10 மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர், மாநில அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசின் மசோதாக்களின் விவரமும் அதன் தற்போதையை நிலையும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு 46 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதில் 41 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 3 மசோதாக்கள் அரசால் வாபஸ் பெறப்பட்டன. 2 மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2021ல் 41 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் 40 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. ஒரு மசோதா அரசால் திரும்ப பெறப்பட்டது. 2022ல் 58 மசோதாக்கள் ஆளுநருக்கு வந்தது. அதில் 44 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. 6 மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 181 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 152 மசோதாக்களுக்கு ஆளுநரால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 5 மசோதாக்கள் அரசால் திரும்ப பெறப்பட்டுள்ளன. 9 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளன. 10 மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 மசோதாக்கள் இதுவரை முடிவு எடுக்கப்படாமல் பரிசீலனையில் உள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மீதான புகாருக்கு அனுமதி கோரிய மனுவில் குறைபாடு இருந்ததால் அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

அதன்பிறகு உரிய விளக்கங்கள் பெற்று கடந்த 18ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு மனு கிடைக்கப்பெற்றது. பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு தொடர்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கு தொடர நவம்பர் 13ம் தேதி ஒப்புதல் தரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற்காக அரசு மே மாதம் அனுப்பிய மனு பரிசீலனையில் உள்ளது. ஜி.பாஸ்கரன் மீது வழக்கு தொடர நவம்பர் 18ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2021ல் பதவியேற்ற நாளிலிருந்து இதுவரை தமிழ்நாடு அரசால் 580 திட்டங்கள் அனுப்பப்பட்டன. இதில் ஆளுநர் 362 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். 165 திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. 53 திட்டங்களுக்கான அனுமதி விசாரணை கட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான மசோதா கடந்த அக்டோபர் 26ம் தேதி அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.

2020 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, 2022 தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த 2வது மசோதா, மீண்டும் 2023ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள 12 மசோதாக்கள் கடந்த 13ம் தேதி முடித்து வைக்கப்பட்டன. இந்த 12 மசோதாக்களில் 10 மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களும் கடந்த 18ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு ஆளுநரின் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE