சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கடும் வெப்பம் மற்றும் பலத்த மழை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. கடந்த ஜூன் முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்தது. அதனால், விலையும் குறைந்திருந்தது.
இந்நிலையில், தற்போது காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.10-க்குவிற்கப்பட்ட கத்தரிக்காய், முருங்கைக்காய் தலா ரூ.20, வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ.15 என விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் விலை தற்போது ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், அவரைக்காய் தலா ரூ.70 ஆகவும், ரூ.36-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.40 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
மற்ற காய்கறிகளான கேரட் ரூ.40, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, சாம்பார் வெங்காயம் ரூ.25, நூக்கல் ரூ.20, பச்சை மிளகாய் ரூ.15, முட்டைகோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது.
விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘பண்டிகை காலம் என்பதால் சற்று விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.