சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று (செப். 9) மேற்கு வங்கம், ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்துக்கு கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 230 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று ஒடிசா மாநிலம் பூரி, மேற்கு வங்க மாநிலம் திகா கடற்கரை இடையே கரையை கடக்கக் கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் வரும் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
» செய்தித் துளிகள்: சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் முதல் கால்பந்து லீக் போட்டி வரை
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.9, 2024
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப். 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ. வால்வாறை, சின்னக்கல்லாறில் 4 செ.மீ. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், கோவை மாவட்டம் சோலையாறு, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, ஆற்காடு, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.