தங்கள் கூட்டணிக்கு வந்தால் மதிமுக எதிர்பார்ப்பது போல இரண்டு தொகுதிகளை வழங்கத் தயார் என அதிமுக தரப்பில் தூதுவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கூட்டணியை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் அப்படியே தொடரும் நிலையில் அவற்றிற்கான தொகுதிப் பங்கீடு இன்னும் முடியவில்லை.
இந்திய முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் , மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுகவுடன்தான் கூட்டணி என்பதை அந்தக் கட்சிகள் உறுதியாக அறிவித்து விட்டாலும் திமுக கொடுக்கும் தொகுதிகளை அப்படியே வாங்கிக் கொள்ள அவை தயாராக இல்லை. தாங்கள் கேட்கும் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன.
அதனால் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறாமல் தாமதமாகிக் கொண்டே செல்கிறது. காங்கிரஸ் 15 தொகுதிகளை கேட்ட நிலையில், தற்போது கடந்த முறை அளித்த எண்ணிக்கையாவது வேண்டும் என்று கேட்டுள்ளது. விசிக, 2 கட்ட பேச்சுவார்த்தையிலும் கடந்த முறை தரப்பட்ட 2 தனித் தொகுதிகளுடன், இந்த முறை 1 பொதுத்தொகுதியும் வேண்டும் என்பதுடன் தங்கள் சின்னத்திலேயே போட்டி என்பதில் உறுதியாக உள்ளது.
அதேபோல் மதிமுகவும், கடந்த முறை தரப்பட்டதுபோல் ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை மற்றும் சொந்த சின்னம் என்கிறது. ஆனால், திமுகவோ மாநிலங்களவை தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும், ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கூறிவருகிறது. இதனால் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதிமுகவுக்கு ரகசிய தூதுவிட்டிருப்பதாக கூறுகிறார்கள். மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக தூது அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால். மாநிலங்களவைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள கசப்புக்கு அதிமுகவிடம் மருந்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்திருந்தார். தற்போது மதிமுகவுக்கு தூது விடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் வரவழைக்க அதிமுக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்பது உறுதியாகிறது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு பயன் கிடைக்குமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
இதையும் வாசிக்கலாமே...
பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!
எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!
அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!
காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!