பெண் வழக்கறிஞர் சங்கத்தில் காணொலி நீதிமன்ற பிரிவு: முதல் முறையாக மதுரையில் தொடக்கம்

By கி.மகாராஜன்

மதுரை: மதுரை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத்தில் நீதிமன்றத்தில் காணொலி வழியாக வாதாடுவதற்கு அனைத்து நவீன வசதிகள் கொண்டு தனிப் பிரிவு தொடக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் காணொலி நீதிமன்ற பிரிவு, ஆன்லைன் மனு தாக்கல் பிரிவு மற்றும் புதிய நூலக பிரிவுகள் தொடக்க விழா சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி தலைமையில் நடைபெற்றது. காணொலி நீதிமன்ற பிரிவை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், ஆன்லைன் மனு தாக்கல் பிரிவை நீதிபதி பி.வேல்முருகன், புதிய நூலக பிரிவுகளை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் நீதிபதி சுப்பிரமணியன் பேசுகையில், "முன்பெல்லாமல் நீதிமன்றத்துக்கு காலையில் செல்ல வேண்டும். வழக்குகளுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என இருந்தது. தற்போது அப்படியான நிலை இல்லை. நீதிமன்றத்துக்கு நேரில் போய் வாதிடும் நிலை இருந்த போதும், இருக்கும் இடத்திலிருந்தே கம்யூட்டர், லேப்டாப், செல்போனை பயன்படுத்தி காணொலி காட்சி வழியாகவும் வாதாடலாம்.

வழக்கறிஞர்கள் காணொலி காட்சி வழியாக வழக்குகளை நடத்துவதற்கு வழக்கறிஞர் சங்கத்தில் தனி வசதி ஏற்படுத்தி கொடுப்பது இதுவே முதல் முறை. நவீன வசதிகளுடன் காணொலி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் பயனடைவர்கள்" என்று நீதிபதி சுப்பிரமணியன் கூறினார்.

நீதிபதி வேல்முருகன் பேசுகையில், "தாங்கள் படிக்கும் காலத்தில் நூலகத்தை பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. கல்லூரியிலும், நூலகத்திலும் தேவையான நூல்கள் இருக்காது. இப்போது இருக்கும் இடத்திலேயே அனைத்து நூல்களையும் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது" என்று நீதிபதி வேல்முருகன் கூறினார்.

நீதிபதி கார்த்திக்கேயன் பேசுகையில், "இ-கோர்ட், இ-பைலிங் வசதிகளை தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து மேலும் மேம்படுத்த வேண்டும்" நீதிபதி கார்த்திக்கேயன் கூறினார். மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE