உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரே செடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய இரு வண்ண டேலியா மலர்கள் பூத்துள்ளதை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்துக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக உதகையில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் நிலவும் இரண்டும் சீசனிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில், இரண்டாம் சீசனுக்காக உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது.
ஒரே செடியில் மஞ்சள் மற்றும் சிகப்பு என இரு வண்ண டேலியா மலர்கள் பூத்துள்ளது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும், இரண்டாம் சீசனுக்காக பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பெட்டுனியா, சால்வியா, டேலியா, மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு உள்ளிட்ட பல வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.