தமிழகத்தை தொடர்ந்து டெல்லியிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகமாக உள்ளது. 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அந்த தேர்தலில் வெற்றிப் பெற்று திமுக ஆட்சி பொறுப்பேற்றது. அன்று முதல் மகளிர் உரிமைத் தொகை எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. நிதிநிலைமை சீரான பிறகு கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், கடந்தாண்டு அண்ணா பிறந்த நாளான செப்.15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர், காஞ்சிபுரத்தில் தொடக்கி வைத்தார். இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சத்திற்கு மேல் பயனாளர்களாக உள்ளனர். மாதந்தோறும் பெண்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரு.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டை தொடர்ந்து டெல்லியிலும் மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பெண்களின் வாக்குகளை பெறுவதற்காக ஆம் ஆத்மி அரசு, இந்த அறிவிப்பை அறிவித்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது... 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
டொனால்ட் டிரம்பை தோற்கடித்து நிக்கி ஹாலே முதல் வெற்றியைப் பெற்றார்!
‘அரபிக்குத்து’ கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் ஆல்பம்!
தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!