இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் மறியல் போராட்டம் @ கோவில்பட்டி

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகுல். இவர் அஞ்சல் துறையில் ரயில்வே மெயில் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் சங்குபுரத்தைச் சேர்ந்த சங்கு சாமி மகள் காயத்ரி (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் கணவன் மனைவி இருவரும் தெற்கு திட்டங்களும் மேல காலனி உள்ள வீட்டில் வசித்து வந்தனர். நேற்றிரவு ராகுல் பணிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் காயத்ரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்ரி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே காயத்ரி இறந்ததை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அவர்கள் காயத்ரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, மருத்துவமனை முன்பு புது ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் ஜின்னா பீர் முகமது, ராஜாராம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காயத்ரியை கற்பனைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் காரணமாக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி சென்ற பேருந்துகள் வாகனங்கள் கடலையூர் சாலை, பழனி ஆண்டவர் கோவில் தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து வந்த வாகனங்கள் எட்டயபுரம் சாலை வழியாக ஊருக்குள் அனுப்பி வைக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE