பூந்தமல்லி: இன்று காலை மாங்காடு அருகே பர்னிச்சர் கம்பெனியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தீக்கிரையாகின.
காஞ்சிபுரம் மாவட்டம்,மாங்காடு அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கெருகம்பாக்கம், பி.டி. நகர், அண்ணாமலையார் தெரு பகுதியில் கட்டில், மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் பர்னிச்சர் கம்பெனியை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், இன்று காலை திடீரென பர்னிச்சர் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து, தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, விருகம்பாக்கம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும், பர்னிச்சர் கம்பெனியில் இருந்த மூலப்பொருட்கள், மெஷின்கள், விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மெத்தை, சோபா, கட்டில் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாங்காடு போலீஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.