தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

By காமதேனு

’ஒரு தகப்பனா சொல்றேன்... மனசு கலங்குது’ என்று போதைப் பொருட்களுக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், போதைப் பொருள் புழக்கத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஒரே நாளில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், குஜராத் கடல் எல்லையில் அண்மையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அக்கட்சி சார்பில் திமுக அரசைக் கண்டித்து இன்று மார்ச் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள பதிவில்,"தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் மார்ச் 4ம் தேதி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இன்றைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்று விடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

பெற்றோர்களே, இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருங்கள்! மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE