சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை சிகாகோவில் சந்தித்து தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதோடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினைக் கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல்வேறு முன்னெடுப்புகள், உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கும் காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.
தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற பல்வேறு சீரிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்திடும் வகையில் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
படித்த திறன்மிகு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, அமெரிக்க நாட்டின் சிகாகோவில், BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
» “தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்; மத்திய மாநில அரசுகள் பாராமுகம்” - இபிஎஸ் சாடல்
BNY மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி நிதி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த வங்கி சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இவ்வங்கிக்கு பல கிளைகள் உள்ளன. தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதல்வரின் வழிகாட்டுதலோடு தமிழக அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
BNY மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைத்திடவும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, BNY மெலன் வங்கியின் துணைத் தலைவர் செந்தில் குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும் அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் மின் அலுவலகம் வழியே பணி தொடர்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.