ஆளுநர் ரவி டெல்லிக்கு இன்று திடீர் பயணம்: அமித் ஷாவை சந்திப்பதாக பரபரப்பு தகவல்!

By காமதேனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காததைக் கண்டித்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவசர அவசரமாக நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியது.

அமித்ஷா வுடன் ஆர்.என்.ரவி

இதையடுத்து சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், மீண்டும் 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல உள்ளார்.

இதற்காக இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட நிபுணர்களைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு

இந்த பயணத்தின் போது, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது எதிர்வாதம் வைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம், தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE