கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் இன்று (செப்.6) தொடங்கப்பட்டது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நடந்த நிகழ்வில், காணொலி காட்சி மூலம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ‘டிஜி யாத்ரா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விமான பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜி யாத்ரா’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா, விஜயவாடா, புனே, மும்பை, கொச்சி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி விமான நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக கோவை உள்ளிட்ட பாட்னா, ராய்பூர், புவனேஸ்வர், கோவா(தாபோலிம்), இந்தூர், பாக்டோகரா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று மத்திய அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, “பொதுவாக பயணிகள் ‘போர்டிங் பாஸ்’ பெற விமான நிலைய வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்திலும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜி யாத்ரா’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் முதலில் ‘டிஜி யாத்ரா’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் மொபைல் எண், போர்டிங் பாஸ், ஆதார், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்தால் பிரத்யேக ‘கியூ ஆர் கோடு’ கிடைக்கும். அதை வைத்து விமான நிலையத்தில் தனியாக ஏற்படுத்தப்பட்ட வழியில் உள்ள டிஜிட்டல் கருவியில் மொபைல் போனில் உள்ள விவரங்கள் மற்றும் தங்களின் முகத்தை காண்பித்து உடனடியாக ஒப்புதல் பெற்று உள்ளே செல்லலாம். குறிப்பாக மொபைல் போன் எண்ணுடன் ஆவணங்கள் அனைத்தும் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றனர்.
» அரசுப் பள்ளி நிகழ்வு சர்ச்சை முதல் விஜய் கட்சி மாநாடு அப்டேட் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்
» குண்டும், குழியுமான சாலையில் நீளம் தாண்டும் போட்டி - மூணாறில் நூதன போராட்டம்