அரசுப் பள்ளி நிகழ்வு சர்ச்சை முதல் விஜய் கட்சி மாநாடு அப்டேட் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

அரசுப் பள்ளி நிகழ்வு சர்ச்சை - அமைச்சர் விளக்கம்: ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் உள்ள அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் பேசிய கருத்துகள், மூடநம்பிக்கையை முன்வைத்து சர்ச்சைக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

பள்ளி நிகழ்ச்சிகள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக, சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

தமிழக அரசுக்கு பாஜக எதிர்ப்பு: அரசுப் பள்ளி நிகழ்வு விவகாரம் குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறும்போது, “சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்வு நடத்தியது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ள கருத்து முதிர்ச்சியற்றது. இது கண்டிக்கதக்கது.

கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த விவாகரத்தை அணுகுகின்றனர். இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் எதிரானது. திமுக அரசு ஆன்மிக சொற்பொழி நடத்துபவர்களை மிரட்டி பார்க்கிறது. இதற்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள், இந்து மதமும் அஞ்சாது” என்று கூறினார்.

இதனிடையே, தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்றும் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு இருக்கிறது என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் ஆன்மிகம், நீதி போதனைகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசுப் பள்ளி நிகழ்வு சர்ச்சை - தலைவர்கள் கருத்து: “அரசுப் பள்ளிகள் மூடநம்பிக்கை கருத்துக்களுக்கான பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் அமைப்புகளின் பயிற்சி களமாகவும் பயன்படுத்தி, இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித் துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும்,” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதனிடையே, அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ரூ.850 கோடியில் முதலீடு - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்: லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செப்.5-ம் தேதி அன்று சிகாகோவில் மேற்கொள்ளப்பட்டன.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், தென்னரசு ஆகியோர் விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீருக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஒரு வரலாறு; அதனை மீண்டும் கொண்டுவர முடியாது என்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமித் ஷா தெரிவித்தார்.

காங்கிரஸில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா: மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம் உள்பட மொத்தம் 26 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை வென்றுள்ளது.

விஜய்யின் தவெக மாநாடு நிலவரம்: “விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தவெக மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி கிடைத்த பிறகு, மாநாடு தேதியை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடு குறித்து அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, “ஒருவேளை காவல் துறையினர் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த அனுமதி மறுத்தால், நீதிமன்றம் மூலம் அனுமதி பெறவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாநாடு நடைபெற இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், அரசு அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று, அதன்பின் அனுமதி பெற்று மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வது சவாலானதுதான்” என்று தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE