சேலம்: தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் சீலநாயக்கன்பட்டியில் பெய்த தொடர் மழையால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். சேலம் அன்னதானப்பட்டி, கண்ணகி தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ் (50). இவர், நெத்திமேடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று வேலைக்குச் சென்று விட்டு வந்த செந்தமிழ், இரவு தனது வீட்டின் வெளிப்புற அறையில் படுத்து தூங்கி இருக்கிறார். வீட்டின் மற்றொரு அறையில் அவரது மனைவி கார்த்திகேஸ்வரியும் (42), மகள் வர்ஷினி பிரியாவும் (13) தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தொடர் மழையால் ஊறிப்போயிருந்த வீட்டின் சுவர், தூங்கிக் கொண்டிருந்த செந்தமிழின் மீது சரிந்து விழுநதது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே செந்தமிழ் உயிரிழந்தார்.

சுவர் விழுந்தபோது, செந்தமிழின் அலறல் சத்தம் கேட்டு கண் விழித்த அவரது மனைவி கார்த்திகேஸ்வரி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்த செந்தமிழின் உடலை மீட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீஸார் செந்தமிழின் உடலை, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE