குமரி முக்கடல் சங்கமத்தில் வழுக்கி விழும் சுற்றுலாப் பயணிகள்: பாசிகளை அகற்றும் பணி மும்முரம்

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கம படித்துறையில் பாசிகள் படர்ந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதனால் பாசிகளை அகற்றும் பணி இன்று துவங்கி மும்முரமாக நடைபெற்றது.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமம் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற நாட்களிலும், பிற விஷேச தினங்களிலும் புனித நீராடுகின்றனர். அது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் முக்கடலில் குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

எனவே குமரிக் கடலில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாகவும் புண்ணிய நாட்களில் புனித நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும் முக்கடல் சங்கமத்தில் படித்துறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படித்துறை கடல் அலை அடித்து அடித்து பாசி படிந்து பாழடைந்து கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த படித்துறை வழியாக கடலில் இறங்கும் போது வழுக்கி தவறி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து படித்துறையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அழகு மீனா படித்துறையில் படிந்துள்ள பாசிகளை அடிக்கடி அகற்றி பராமரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் கட்டப்பட்டிருந்த படித்துறையில் படித்திருந்த வழுக்கும் தன்மை கொண்ட பாசிகளையும், அங்கு குவிந்திருந்த மணல்களையும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் துப்புரவுப் பணியாளர்கள் இந்த பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சுற்றுலா ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE