உதகையில் ‘லவ் ஜிகாத்’ என சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக மாநில நிர்வாகி கைது

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் காபியில் சயனைடு கொடுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை, ‘லவ் ஜிகாத்’ என சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஜவஹருல்லா(50). இவருடைய மனைவி யாஸ்மின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இம்ரான், உதகை வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது- நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீனும் (22) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு வீட்டாரிடம் தெரிவித்தனர்.

முதலில் எதிர்ப்பு தெரிவித்த இரு வீட்டாரும், அதன்பின்னர் சம்மதித்து, இம்ரான் மற்றும் ஆஷிகா பர்வீன் ஆகியோருக்கு 2021-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் மாமியாரான யாஸ்மினுக்கும்- மருமகளான ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி ஆஷிகா பர்வீனுக்கு காபியில் சயனைடு கலந்து கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். வரதட்சனையாக ரூ. 20 லட்சம் கேட்டு தராததால் இந்தக் கொடூர செயலில் இளம் பெண்ணின் மாமியார் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து யாஸ்மின், இம்ரான், முக்தார் மற்றும் காலிப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆஷிகா பர்வீன் ஒரு இந்து பெண் என்றும் அவரை ‘லவ் ஜிகாத்’மூலம் இஸ்லாமியராக மாற்றி இம்ரான் திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கொடுமை செய்து கொன்றதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது.சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியது யார்? என சைபர் கிரைம் உதவியுடன் போலீஸார் தேடி வந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் தவறான தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர் மீது இன்று உதகை மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில், அருப்புக்கோட்டைக்குச் சென்று வெற்றிவேலை கைது செய்து உதகைக்கு அழைத்து வந்தனர். ‘லவ் ஜிகாத்’ என அவதூறு பரப்பிய சம்பவத்தில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.............

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE