விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடர்பாக காவல்துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று நேரில் பதில் அளித்தார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நடிகர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விக்கிரவாண்டி அருகே வி சாலையில் வருகின்ற 23ம் தேதி தமிழகவெற்றிக் கழக முதல் மாநாடு நடத்த அனுமதி வேண்டி கடந்த 28ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அன்றே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் விழுப்புரம் டி எஸ் பி சுரேஷ் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கடந்த 2ம் தேதி அனுப்பிய கடிதத்தில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு 5 நாட்களில் பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இன்று விழுப்புரம் டி எஸ்பி சுரேஷிடம் காவல்துறை கேட்ட கேள்விகளுக்கான பதிலை எழுத்துப்பூர்வமாக அக்கட்சியினர் அளித்தனர்.
இதனை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியது, “காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கு உண்டான பதில்களை இன்று கொடுத்துள்ளோம்.மேலும் காவல்துறை உயர் அலுவலர்களிடம் பேசிய பின்பு ஒரிரு நாட்களில் சொல்வதாக சொல்லியுள்ளனர். அதன் பின் முறைப்படி தலைவர் மாநாடு குறித்த தேதியை அறிவிப்பார்” இவ்வாறு அவர் கூறினார்.
» பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றார் பிரவீன் குமார்!
» முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்த நடிகர் விஜயின் ‘GOAT'!