விதிகளைப் பின்பற்றாத 22 தனியார் பள்ளி பேருந்துகள் தகுதி நீக்கம்: குன்றத்தூர் கோட்டாட்சியர் அதிரடி

By பெ.ஜேம்ஸ் குமார்

குன்றத்தூர்: குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளின் தகுதி குறித்து முதல் கட்ட ஆய்வு குன்றத்தூரில் நடைபெற்றது. இதில், 22 பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதங்களில் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி இன்று (23ம் தேதி ) நடைபெற்றது. இதில் 28 பள்ளிகளுக்கு உட்பட்ட 329 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சரவணக் கண்ணன், குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக, பள்ளி பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், முதலுதவி பெட்டிகள், பயோ மெட்ரிக், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவைகள் முறையாக இயங்குகின்றனவா? என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பேருந்துகளில் மாணவ, மாணவிகள் உட்காரும் இருக்கைகள், வாகனத்தில் பிரேக்குகள் மற்றும் அவசர கால வழி போன்றவைகள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா? என்பன உள்ளிட்ட 17 விதிகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுக்கு பின்னர் வெளிப் பகுதியை விட உள் புறம் தூசி அதிகாமாக உள்ளது. குழந்தைகள் அமரும் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என கோட்டாட்சியர் சரவணக் கண்ணன் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மாணவ, மாணவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும், வாகனங்களை இயக்குவது குறித்தும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. முதல் கட்ட சோதனையில் 184 பேருந்துகளில் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்த 22 பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தொடந்து, பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக வரும் திங்கள் கிழமை 167 பேருந்துகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE